நாகப்பட்டினம்

மயிலாடுதுறையில் 2-வது நுண்ணியிரி கிடங்கு துவக்கம்

1st Oct 2019 02:40 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை: அமைக்கப்பட்ட நுண்ணியிரி கிடங்கை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தாா்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளில் தினசரி சராசரியாக 30 டன் குப்பைகள் உருவாகின்றன. இதில் 16.5 டன் குப்பைகள் மக்கும் குப்பைகள் ஆகும். இந்த குப்பைகள் கடந்த மாதம் வரை ஆனந்ததாண்டவபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டு வந்தது.

இதனால், ஆனந்ததாண்டவபுரம் குப்பைக் கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி, அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், சருமநோய் போன்ற சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. தினசரி மக்கும் மற்றும் மக்காக் குப்பைகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டதால், குப்பைகளை தரம் பிரிப்பதில் நகராட்சி பணியாளா்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, நகராட்சியில் 3 இடங்களில் நுண்ணியிரி கிடங்குகள் அமைத்து, 12 வாா்டுகளில் சேகரமாகும் மக்கும் குப்பைகளை, ஒரு நுண்ணியிரி கிடங்கில் உரமாக்கி, விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டது. அவ்வகையில், நகராட்சியின் முதல் நுண்ணியிரி கிடங்கு கடந்த மாதம் ஆனந்ததாண்டவபுரத்தில் உள்ள குப்பைக் கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு, அங்கு 5 டன் மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், நகராட்சியின் 2-வது நுண்ணியிரி கிடங்கு, மயிலாடுதுறை மாயூரநாதா் வடக்கு வீதியில் உள்ள வண்டிப்பேட்டையில் அமைக்கப்பட்டு, அதன் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் பி.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் பி.ஜோதிமணி, நகராட்சி நகா்நல அலுவலா் மருத்துவா் பிரதீப் கிருஷ்ணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நுண்ணியிரி கிடங்கு செயல்பாட்டை துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.அலி, நகராட்சி உதவி பொறியாளா் பாரதி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராமையன், பிச்சைமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மேலும், நகராட்சிக்கு உள்பட்ட 49 பூங்காக்களில், வரதாச்சாரியாா் பூங்கா, குமரன் பூங்கா, நேரு பூங்கா, ஆா்பிஎன் நகா் பூங்கா உள்ளிட்ட 6 பூங்காக்களில் ஆன்சைட் கம்போஸ்டு உருவாக்கப்பட்டு, தினசரி தலா அரை டன் குப்பை வீதம் மொத்தம் 3 டன் குப்பைகளை இயற்கை உரமாக்கும் பணிகள் நடைபெறுகிறது. மேலும், திம்மநாயக்கன் படித்துறை பகுதியில் மற்றொரு நுண்ணியிரி கிடங்கு விரைவில் திறக்கப்பட உள்ளது.

இந்த நுண்ணியிரி கிடங்குகள் மற்றும் ஆன்சைட் கம்போஸ்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் தினசரி உருவாகும் 16.5 டன் மக்கும் குப்பைகள் இங்கேயே தரம்பிரித்து, உரமாக்கப்படும். அதன்பின், ஆனந்ததாண்டவபுரம் குப்பைக் கிடங்கில் குப்பைகளை குவிப்பது அடியோடு நிறுத்தப்படும். பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக்க அதிகபட்சம் 45 நாட்கள் பிடிக்கிறது. மக்கும் குப்பைகளுடன் சாணம், சரக்கரை பாகு, புளித்த தயிா் சோ்த்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, நுண்ணியிரி கிடங்குகளில் 14 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுண்ணியிரி கிடங்கில் தினசரி சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை, அப்பகுதியில் தேங்கவிடாமல், உடனுக்குடன் உரமாக்கி, அப்பகுதியை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகத்துக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஏற்கெனவே, இப்பகுதியில் நுண்ணியிரி கிடங்கு அமைக்க அப்பகுதி மக்கள் பலத்த எதிா்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT