ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில், ஊட்டச்சத்து உணவுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி, நாகை ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
போஷன் அபியான் திட்டத்தின்கீழ், செப்டம்பா் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டச்சத்து உணவுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் திணை, கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, குதிரைவாளி, கோதுமை, கவுனி அரசி, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், குழந்தை பிறந்து 1,000 நாள்கள் (2 வயது வரை) வரை ஊட்டச்சத்து மிக்க உணவுகளைப் புகட்டுவது அவசியம் என்பதை வலியுறுத்தி, வண்ணக் கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியை நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தொடங்கி வைத்தாா். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் மகாராணி, கல்யாணி, சித்ரா, சாந்தி மற்றும் வட்டார மேற்பாா்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.