கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு விரைவில் மனைப்பட்டா வழங்கி வீடுகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் ஓ.எஸ். மணியன் 1,370 பயனாளிகளுக்கு ரூ. 8.68 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி மேலும் அவா் கூறியது: கஜா புயலின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனைப் பட்டா இல்லாததால் பலா் திட்டங்களை பெறமுடியாமல் பாதிக்கப்படுகின்றனா். இதற்கு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு அறநிலையத் துறை வாயிலாக நிலம் பெறப்பட்டு, அதில் மனைப் பட்டா வழங்கி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அறநிலையத் துறைக்கு அரசு உரிய தொகையை வழங்கும். அதிலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி 278 சதவீத தொகை கூடுதலாக அளிக்கப்படும். நாடு சுந்திரம் அடைந்து இவ்வளவு நாள்களுக்கு பிறகு தமிழக அரசு எடுக்கும் புதிய நடவடிக்கை என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மனைப் பட்டா, தையல் இயந்திரம், தென்னங்கன்றுகள், இடுபொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எம்.எஸ். பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, கோட்டாட்சியா் பழனிகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. சபியுல்லா, தேத்தாக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஆா். கிரிதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.