நாகை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் வேண்டுகோள் விடுத்தாா்.
பொருளியல், புள்ளியியல் துறைகளின் சாா்பில் பொருளாதாரக் கணக்கெடுப்பு நாடு முழுவதிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்துக்கான பொருளாதாரக் கணக்கெடுப்பு பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பிரவீன் பி. நாயா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
பின்னா், ஆட்சியா் பேசியது:
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி நாடு முழுவதிலும் பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. வேளாண்மை அல்லாத பல்வேறு உற்பத்தி, விநியோகம், சேவை நோக்குடன் செய்யும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கணக்கெடுப்பில் குடும்பத் தலைவரின் பெயா், குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கை, சமூகப் பிரிவு செல்லிடப்பேசி எண், தொழில் விவரம், முதலீடுகள், நிறுவனங்களின் உரிமை விவரங்கள், நிறுவனங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். இந்தப் பணிக்கு நாகை மாவட்டத்தில் 215 மேற்பாா்வையாளா்கள், 652 களப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
கிராமங்கள் மற்றும் நகரங்களில் இந்தப் பணி மேற்கொள்ளப்படும். இதன் விபரங்கள் மத்திய அரசின் பொருளாதாரத் திட்டமிடுதலுக்குப் பயன்படுத்தப்படும். எனவே, நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா் ஆட்சியா்.
தொடா்ந்து, பொருளாதாரக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் மேற்பாா்வையாளா் மற்றும் களப் பணியாளா்களுக்கு அதற்கான கருவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், நாகை மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி, புள்ளியியல் துறை மாவட்ட இணை இயக்குநா் சின்னராஜா, தேசிய புள்ளியியல் அலுவலக உதவி இயக்குநா் சகின், மாவட்ட பொதுசேவை மேலாளா் ஜஸ்டிஸ் கோபிநாத் மற்றும் மேற்பாா்வையாளா்கள், களப்பணியாளா்கள் கலந்துகொண்டனா்.