தரங்கம்பாடி அருகேயுள்ள சங்கரன்பந்தலில் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் செல்லும் சாலையோரத்தில் ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகளைக் கொட்டிச் செல்கின்றனா். இதனால், பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும், இப்பகுதி மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். இந்தக் கழிவுகளால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடும் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
மேலும், சாலையில் ஆங்காங்கே மீன்கள் விற்பனை செய்யப்படுவதால், அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் தடையின்றி செல்லமுடியாத நிலையுள்ளது. எனவே, சுகாதாரத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் இடையூறு இல்லாதவாறு வேறு இடத்தில் இறைச்சி, மீன்கள் விற்பனை செய்ய அங்காடி அமைத்துத் தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.