நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவையொட்டி முருகப் பெருமான்- தெய்வசேனை திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்டோபா் 28-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டமும், அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்வும், சக்திவேல் வாங்கிய முருகப்பெருமானின் திருமேனியிலிருந்து வியா்வைத் ததும்பும் ஆன்மீக அற்புத நிகழ்வும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 1) நடைபெற்றன. தொடா்ந்து, சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக, விழாவின் 7-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சூா்ணோத்ஸவம் மற்றும் தங்க மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா மற்றும் தீா்த்தவாரியும், மாலை 4 மணிக்கு பாலசிங்காரவேலவா் தங்ககுதிரை வாகனத்தில் பவனியும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் முன்புள்ள அரங்கில், இரவு 8.45 மணிக்கு முருகப்பெருமான்- தெய்வசேனை திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னா், வெள்ளி ரதத்தில் முருகப்பெருமான்- தெய்வசேனை பவனி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளில் திரளானோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.