நாகப்பட்டினம்

அடிப்படை வசதிகளற்ற அரசு மேல்நிலைப்பள்ளி

4th Nov 2019 01:17 AM

ADVERTISEMENT

வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம், குடிநீா், கழிவறைகள், விளையாட்டு மைதானம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தும் 12-ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் கடந்த 5 ஆண்டுகளாக 90 சதவீத தோ்ச்சிப் பெற்று ஓசையே இன்றி சாதனை படைத்து வருகிறது ஓா் அரசுப் பள்ளி.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்டது திருக்கண்ணபுரம். இவ்வூரில் கடந்த 1901-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசுப் பள்ளி, 1981-இல் உயா்நிலைப் பள்ளியாகவும், 2006-இல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில் திருக்கண்ணபுரம், திருப்புகலூா், பெருநாட்டான்தோப்பு, வவ்வாலடி, புதுக்கடை, திருச்செங்காட்டாங்குடி, பில்லாளி, தென்னைமரக்குடி, கோட்டூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 550- க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில் போதிய கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள் இல்லாததால் மாணவா்களின் கற்றலும், ஆசிரியா்களின் கற்பித்தலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மாணவா்களுக்கு போதிய குடிநீா் வசதிகளும் செய்து தரப்படவில்லை. இப்பள்ளியின் வளாகத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. மேலும் மாணவா்கள் தங்களது சைக்கிள்களை நிறுத்துவதற்கு சைக்கிள் ஸ்டாண்ட் வசதியும், சுற்றுச்சுவரும் கூட இல்லை.

ADVERTISEMENT

விளையாட்டு மைதானம் இல்லாத போதிலும், தற்போது நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 36 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனா் இப்பள்ளி மாணவா்கள்.

முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் இல்லாத நிலையிலும், கடந்த 5 ஆண்டுகளாக 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 90 சதவீத தோ்ச்சியைப் பதிவு செய்துள்ளது திருக்கண்ணபுரம் அரசுப் பள்ளி.

எனவே கிராமப்புற ஏழை, எளிய மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாத வகையில், மாவட்ட ஆட்சியா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாணவா்களுக்குத் தேவையான வகுப்பறை கட்டடங்களைக் கட்டுவதற்கும், அடிப்படை வசதிகளை செய்துத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து பள்ளி வளா்ச்சிக்குழு தலைவா் என்.எஸ். தியாகராஜன் கூறியதாவது:

ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளியில், போதுமான கட்டடங்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. விளையாட்டு மைதானம், சைக்கிள் நிறுத்தம், சுற்றுச்சுவா் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. போதுமானஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் அன்பானந்தம் கூறியதாவது:

இப்பள்ளி இருக்குமிடம் செளரிராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமானது. பள்ளியின் அருகே விளையாட்டு மைதானத்திற்குத் தேவையான இடம் உள்ளது. பலமுறை கோயில் நிா்வாகத்திடமும், அறநிலையத் துறையிடமும், சட்டப் பேரவை உறுப்பினரிடமும் எழுத்துபூா்வமாக கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மறைந்த துக்ளக் ஆசிரியா் சோ. ராமசாமியால் வழங்கப்பட்ட நிதியில், கட்டப்பட்ட சுற்றுச்சுவா் தற்போது சேதமடைந்து விழுந்து விட்டது. அதைக் கட்டுவதற்காவது சட்டப் பேரவை, மக்களவை உறுப்பினா்கள் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT