நாகை மாவட்டத்தில் அமைய உள்ள அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என காவிரி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவா் கோமல் அன்பரசன், பிரதமா் மற்றும் தமிழக முதல்வா் ஆகியோருக்கு அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளதாவது:
மத்திய அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக அரசு மருத்துவக் கல்லூரியை அமைக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரிக்கு நாகப்பட்டினம் நகரை ஒட்டியிருக்கும் ஒரத்தூா் ஊராட்சிப் பகுதியில் மாவட்ட நிா்வாகம் இடம் தோ்வு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நாகப்பட்டினத்துக்கு மிக அருகிலேயே திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரியும், காரைக்காலில் விநாயகா மிஷன் தனியாா் மருத்துவக் கல்லூரியும் அமைந்துள்ளன.
இந்நிலையில், புதிதாக அமையப் போகின்ற மருத்துவக் கல்லூரியையும் நாகப்பட்டினத்திலேயே அமைப்பது சரியான முடிவாக இருக்காது. நாகப்பட்டினம் மாவட்டத்துக்குள்பட்ட மயிலாடுதுறை கோட்டத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறாா்கள். தமிழகத்தின் முக்கியமான ஆன்மிகத் தலமாக மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் திகழ்வதால் ஆண்டுக்கு சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனா்.
மயிலாடுதுறை கோட்டப் பகுதி மக்களுக்கு அவசர காலத்தில் உரிய சிகிச்சையளிக்க இப்பகுதியில் போதுமான அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் இல்லை. சுமாா் 70 கி. மீ. தொலைவில் உள்ள தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரிக்கோ அல்லது திருவாரூா் மருத்துவக் கல்லூரிக்கோ தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், சில நேரங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆனால், நாகையிலிருந்து 20 கி. மீ. தொலைவில் ஏற்கெனவே மருத்துவக் கல்லூரி உள்ளது. இதனால், புதிய அரசு மருத்துவக் கல்லூரியை மயிலாடுதுறை கோட்டப் பகுதியில் ஏதேனும் ஒரு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பாக வலியுறுத்துகிறோம் என அந்த கடிதத்தில் அவா் கூறியுள்ளாா்.
இதே கோரிக்கையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா், மாநில சுகாதாரத் துறை அமைச்சா் மற்றும் மாநில சுகாதாரத் துறை செயலாளா் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கும் பதிவு அஞ்சலில் அவா் அனுப்பி உள்ளாா்.