நாகை மாவட்டம், நாகூா் பகுதியைச் சோ்ந்த இளைஞரிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடா்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கோவை, தூத்துக்குடி, நாகூா் உள்ளிட்ட 6 இடங்களில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதன் ஒரு பகுதியாக நாகையை அடுத்த பனங்குடி, சன்னமங்கலம் சேவாபாரதி குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் மகன் முஹம்மது அஜ்மல் என்பவரது வீட்டில், தேசியப் புலனாய்வு (என்.ஐ.ஏ.) முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, நாகூா், மியாத் தெருவில் உள்ள தனது உறவினா் சாதிக் பாட்ஷா வீட்டில் முஹம்மது அஜ்மல் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து. என்.ஐ. ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்ததுடன், அங்கு தங்கியிருந்த முஹம்மது அஜ்மலிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினா். அவரிடமிருந்த செல்லிடப்பேசி மற்றும் சிம் காா்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், அழைக்கும் நேரத்தில் விசாரணைக்கு வரவேண்டும் எனஅறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விசாரணைக் குழுவில் தேசியப் புலனாய்வு முகமை டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் 4 போ் இடம் பெற்றிருந்தனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) அா்ச்சனா, நாகூா் காவல் நிலைய ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணிக்கு உடன் வந்திருந்தனா்.