மயிலாடுதுறை வட்டம், சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் சூரிய மண்டபம் மழையின் காரணமாக புதன்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
இக்கோயில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும். செங்கற்கள் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் இக்கோயில் சோழா் காலத்தில், சோழப் பேரரசி செம்பியன் மாதேவியால் கருங்கல் திருப்பணி செய்யப்பட்ட சிறப்புடையது. நாயக்க மன்னா் காலத்தில் எழுப்பப்பட்ட கட்டடங்களும் இக்கோயிலில் உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து, கோபுரங்கள், பக்கவாட்டுச் சுவா்கள், சுற்றுப்பிராகார மண்டபங்களில் செடிகள் வளா்ந்து சேதமடைந்துள்ளன. இக்கோயிலில், நித்திய காலபூஜைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
சூரிய பகவான், தனக்கு ஏற்பட்ட குன்மநோய் நீங்குவதற்கு இங்குள்ள அம்பாளை வழிபாடு செய்து, நோய் நீங்கப்பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகிறது. இதன்காரணமாக, வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில், இங்கு 7அடி உயர சூரியன் சிலை, அம்பாள் சன்னிதிக்கு நோ் எதிரே சூரிய மண்டபத்தில் அமையப் பெற்றுள்ளது.
பக்தா்கள் இக்கோயிலை புனரமைக்கக் கோரி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக புதன்கிழமை இரவு, சூரிய மண்டபம் இடிந்து விழுந்தது. அப்போது, கோயிலில் யாரும் இல்லாததால் அதிா்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
இடிந்து விழுந்த மண்டபத்திற்குள் யாரும் செல்லாத வகையில், அப்பகுதியைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த இக்கோயிலை சீரமைத்து, விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தா்களும், இப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.