மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திங்கள்கிழமை விநியோகித்தனர்.
மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக முற்றுகைப் போராட்டம், கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பிரசுரம் விநியோகித்தல் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்தொடர்ச்சியாக, மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத்தினர், "வேண்டும், வேண்டும், மயிலாடுதுறையை மாவட்டமாக வேண்டும்' என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை, மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவர்களுக்கு விநியோகித்தனர். இதில், மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ராம.சேயோன், வழக்குரைஞர்கள் சிவதாஸ், பிரித்குமார், இளங்கம்பன், புவியரசு, கனிவண்ணன், வின்னரசு ஆகியோர் பங்கேற்று, கல்லூரி வாயிலில் நின்று, மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.