நாகப்பட்டினம்

சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம்  ஒப்படைக்க உதவியவருக்கு எஸ்.பி. பாராட்டு

30th Jul 2019 06:47 AM

ADVERTISEMENT

திட்டச்சேரி அருகே சாலையில் தவறவிட்டப் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க உதவியவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
 நாகை மாவட்டம், திட்டச்சேரி உஸ்மானியா தெருவைச் சேர்ந்தவர் முகம்மது பசுருதீன் (63). இவர், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் காரைக்காலுக்குச் சென்றபோது, ஆலங்குடிச்சேரி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் பையில் வைத்திருந்த ரூ. 61 ஆயிரம் தவறி கீழே விழுந்தது. இதை அவர் கவனிக்காமல் சென்றுவிட்டார். 
அவருக்குப் பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த திட்டச்சேரி நபிகள் நகரைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி (63) என்பவர் கீழே கிடந்த பையை எடுத்துப்பார்த்தபோது, அதில் பணம் இருந்ததால், அருகில் இருந்த வாழ்மங்கலம் சோதனைச் சாவடியில் ஒப்படைத்துள்ளார்.
பின்னர், அந்த பையை திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளர் பார்த்தீபன் சோதனை செய்தபோது அதில் ரூ.61 ஆயிரம் பணத்துடன், தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருந்த சீட்டும் இருந்தது. அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த பணம் முகம்மதுபசுருதீனுடையது என்பது போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பணத்தை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன், அப்பாஸ்மந்திரியை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT