நாகை மக்களவைத் தொகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என எம்பி செல்வராசு மக்களவையில் வலியுறுத்தினார்.
இதுகுறித்து, மக்களவையில் அவர் பேசியது:
நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட நாகை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகள் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வரவில்லை. எனவே, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நீர் உரிய முறையில் விடுவிக்கப்படாததால் தமிழகத்தில் சாகுபடி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. கஜா புயல் பயிர்களுக்கு முழு சேதத்தை ஏற்படுத்தியதோடு, லட்சக்கணக்கான தென்னை மரங்கள், தேக்கு மரங்கள் , வாழைத் தோப்புகள் ஆகியவற்றை அழித்துவிட்டன. இதனால், விவசாயிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான நிதி ஏதும் அரசால் வழங்கப்படவில்லை. மத்திய அரசு மிகச் சிறிய தொகையை வழங்கியுள்ளது. கஜா புயலின் பாதிப்புகளையும், சேதத்தையும் பார்க்கும்போது மத்திய அரசு வழங்கிய தொகை யானைப் பசிக்கு சோளப் பொறி போன்றது. இதுவரை ஏற்பட்ட அழிவுகளை விட கஜா புயலால் ஏற்பட்ட அழிவு மிகப் பெரியது. மீட்புப் பணியில் தமிழக அரசு முழு வேகம் காட்டவில்லை.
நம்பமுடியாத அழிவையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ள கஜா புயல் பாதிப்பில் இருந்து ஓரளவு மீண்டுவர மத்திய அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் போதிய நிதி வழங்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என வலியுறுத்தினார்.