நாகப்பட்டினம்

சிவன் கோயில்களில் உழவாரப் பணி

29th Jul 2019 07:35 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை கூறைநாடு புனுகீசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  
மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில், திருக்கோயில்களின் உழவாரம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக, மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதில், கோயிலில் படிந்திருந்த ஓட்டடைகள் அகற்றப்பட்டு, விளக்கு மாடங்கள் மற்றும் பிராகாரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
இப்பணியில், மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் இராம.சேயோன், செயற்பொறியாளர் பிரகாஷ், சாலியர் மகாஜன சங்க செயலாளர் குமார் மற்றும் சாய் சட்டக் குழும ஊழியர்கள் கலந்துகொண்டு கோயில் வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இனி வருங்காலங்களில், மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கோயில்கள் குறிப்பாக பாழடைந்த கோயில்களில் உழவாரப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர்  இராம.சேயோன் தெரிவித்தார்.
ரெத்தினபுரீசுவரர் கோயில்...
மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அருகே திருவாளப்புத்தூர் கிராமத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரெத்தினபுரீசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் அபிஷேக நீர் மற்றும் மழைநீர் வெளியேறும் பாதை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், கோயில் தீர்த்தத்துக்கு தண்ணீர் செல்லாமல் வறண்டு காணப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலூரைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலின் வெளிப்புறங்களை தூய்மைப் படுத்தினர். இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் சேலத்தைச் சேர்ந்த ஓம் ஸ்ரீசதுர்கால பைரவர் உழவார பணி சிவனடியார்கள் 60 பேர் இக்கோயிலுக்கு வந்து உழவாரப்பணி மேற்கொண்டனர். 
கோயில் முழுவதும் சுத்தம் செய்து, வெள்ளையடிக்கும் பணிகளை மேற்கொண்டனர். மேலும், சிலைகளையும் சுத்தப்படுத்தினர். இக்கோயிலுக்கு, இந்து அறநிலைய ஆட்சித்துறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும், கோயிலுக்குச் சொந்தமான 350 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT