மயிலாடுதுறையை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மூன்று வழிகளில் போராட்டத்தை முன்னெடுப்பது என புதன்கிழமை நடைபெற்ற காவிரி அமைப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு, காவிரி அமைப்பின் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுந்தர், கார்த்திக், யோகுதாஸ், கார்த்திக் ஆண்டணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அகஸ்டின்விஜய் வரவேற்றார்.
தீர்மானங்கள்: மயிலாடுதுறை மக்களின் குரல் அரசின் செவிகளுக்கு எட்டச் செய்வதற்கான தருணம் இது. எனவே, இதைப் பயன்படுத்தி அனைத்து வகையான அமைப்புகளும், ஜனநாயக ரீதியிலான அழுத்தங்களையும், அமைதி முறையிலான போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, "ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்?' என்கிற தலைப்பில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பரப்புரை பயணங்களை மேலும் தீவிரப்படுத்துவது. பெருமளவு இளைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த பரப்புரை இயக்கத்தில், மேலும் இளைஞர்களையும், மாணவர்களையும் கொண்டு வந்து அவர்களின் வழியாக மக்களின் உணர்வுகளை திரட்டுவது.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வணிகர் சங்கங்கள், வழக்குரைஞர்கள் சங்கம், மருத்துவர் சங்கம், சேவை அமைப்புகள், விவசாய இயக்கங்கள், தொழிலாளர் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் இணைத்து அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவில் சேர்ந்து செயல்படுவது.
சென்னையில் இதற்கு தேவையான ஆவணங்களைத் தயார் செய்து தொடர்புடைய துறைகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கு வழங்கி அவர்களிடம் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான தேவையைப்பற்றி விளக்குவதற்கான பணியையையும் மேற்கொள்வது. இதற்காக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், நீதியரசர்கள், மூத்த வழக்குரைஞர்கள் உள்ளிட்டோரிடம் சட்டப்படியான ஆலோசனைகளை பெறுவதற்கான முயற்சிகளையும், மயிலாடுதுறை மாவட்டம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களையும் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
துணைத் தலைவர் வழக்குரைஞர் செள.சிவச்சந்திரன் நன்றி கூறினார்.