நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது நல்லது என்று தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறினார்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்தி, மயிலாடுதுறை கோட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம், நீதிமன்றப் பணி புறக்கணிப்பு, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முற்றுகை, தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்புதல் போன்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், மயிலாடுதுறை தனி மாவட்டக் கோரிக்கையை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
தருமபுரம் ஆதீன 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாசி கூறி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நிர்வாக வசதிக்காக நாகை மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பது நல்லது. மாவட்டத்தைப் பிரித்தால் மக்களுக்கு செளகரியமாக இருக்கும். மாவட்டத்தைப் பிரித்த பின்னரும் மக்கள் அனைவரும், மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, தருமபுரம் ஆதீன இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகளை வழக்குரைஞர்கள் சந்தித்து ஆசி பெற்றனர். தொடர்ந்து, ஆதீனக் கண்காணிப்பாளர் மோகன் கையெழுத்து இயக்கத்தில் முதல் கையெழுத்தைப் பதிவு செய்தார். இதில், ஆதீன வழக்குரைஞர் சிவபுண்ணியம், மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் இராம.சேயோன், துணைத் தலைவர்கள் அறிவொளி, பாலமுருகன், மயிலாடுதுறை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் வேலு.குபேந்திரன், வழக்குரைஞர்கள் சிவதாஸ், முருகவேல், பிரீத்குமார், இளங்கம்பன், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.