நாகப்பட்டினம்

கூட்டுறவு சங்கத் தேர்தல்: நீதிமன்ற உத்தரவின்படி 14 மாதங்களுக்குப் பிறகு வேட்பு மனுக்கள் பரிசீலனை

27th Jul 2019 07:28 AM

ADVERTISEMENT

வேதாரண்யம் பகுதியில் இரண்டு வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 14 மாதங்களுக்குப் பிறகு வேட்பு மனுக்கள் பரிசீலனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் கடந்த ஆண்டு மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக 45 பேர் வேட்பு மனுக்களை தாக்கல்  செய்திருந்தனர்.
இந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டவேண்டிய நாளில் முறையான அறிவிப்பு இல்லாததால்,தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி திமுக உள்ளிட்ட ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கூட்டுறவு சங்கங்களுக்கான திருச்சி மத்திய மண்டல சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், 45 வேட்பு மனுக்களும் மறு பரிசீலனை செய்யப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர் செல்வம் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். 37 மனுக்கள் ஏற்கப்பட்டதாக இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக தரப்பு மனு 11, திமுக தரப்பு மனு-10 மற்றவை 16 ஆகும்.
இதேபோல், ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. 57 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் 49 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த சங்கங்களுக்கான தேர்தல் ஜூலை 31- ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT