நாகப்பட்டினம்

பயிர்க் காப்பீடு விவகாரம்: விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

19th Jul 2019 12:39 AM

ADVERTISEMENT


பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகை மாவட்டம், கீழ்வேளூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2017-18-ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்திய கீழ்வேளூர், ராதாமங்கலம், ஆந்தகுடி, வெண்மணி, மோகனூர், கூத்தூர், வெங்கிடங்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 1,052 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் எம். செல்வராஜ் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் டி. துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி. ஜெயராமன், விவசாய சங்கச் செயலாளர் என்.எம்.அபுபக்கர், மாநிலக்குழு உறுப்பினர் எம். சாந்தி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர். தொடர்ந்து, துணைக் காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி)  பா. அர்ச்சனா, கீழ்வேளூர் வட்டாட்சியர் முருகேசன், கீழ்வேளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலாளர் கே. அமிர்தம் ஆகியோர் ஆர்பாட்டத்தில்  ஈடுபட்ட  விவசாயச் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பயிர் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தியுள்ள 1,052 பேருக்கும், இழப்பீடு தொகை வழங்குவதற்கு ரூ.1.51 கோடி வர பெற்றுள்ளது. இதன்மூலம் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனக் கூறியதையடுத்து, விவசாய சங்கத்தினர் கலைந்து சென்றனர். 
சாட்டியக்குடியில்...
இதேபோல் கீழ்வேளூர் வட்டம், சாட்டியக்குடியில் பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தனர். 
விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஏ.கோபாலன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி பங்கேற்றுப் 
பேசினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT