சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மழை வேண்டி புதன்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீசுவரர் சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு, ஆடி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு கோ பூஜை நடைபெற்றது.
முன்னதாக, கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்விக்கப்பட்டது. பின்னர், கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசு மற்றும் கன்றுக்கு வஸ்திரம், மாலைகள் அணிவித்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து, மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் மந்திரங்கள் முழங்கி மாடு, கன்றுகளுடன் திரளான பக்தர்கள் கோயிலை வலம் வந்தனர். பின்னர் மாடு, கன்றுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கோ பூஜை வழிப்பாட்டுக் குழு பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல், ஆடி மாதப் பிறப்பையொட்டி அஸ்திரத் தேவருக்கு தீர்த்தவாரி வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க பிரம்ம தீர்த்தக் குளத்துக்கு எழுந்தருளிய அஸ்திரத் தேவருக்கு மஞ்சள், திரவியப் பொடி, பால், தயிர், சந்தனம் முதலான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.