"மாடு உனக்கு கடவுள்- எனக்கு உணவு' என்ற கருத்து கண்டிக்கத்தக்கது என இந்திய தேசிய லீக் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை : மாடு உனக்கு கடவுள். எனக்கு உணவு என சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த யூனுஸ் என்ற பெயரில் முகநூலில் ஒரு கருத்து பதிவிடப்பட்டுள்ளது. இந்த அநாகரிகமான செயல் கண்டிக்கத்தக்கது. முஸ்லிம் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு இதுபோன்ற செயலை செய்வது கீழ்த்தரமானது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. முஸ்லிம்களும் ஆதரிக்கமாட்டார்கள். தமிழகத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என அனைத்து மதத்தினரும், மதம் சாராதவர்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் நிலையில், இதுபோன்று ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது. மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பதிவுகளை பகிர்வதைத் தவிர்த்து, அனைவரும் கண்டிக்க வேண்டும்.
முகநூல் கருத்தால் மனம் புண்பட்டவர்கள், காவல் துறை மூலம் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். மாறாக, சட்டத்தைக் கையிலெடுப்பதை தவிர்க்க வேண்டும். அடுத்தவர் மனம் புண்படும் வகையில் முகநூலில் கருத்துப் பதிவிட்டவர், உடனடியாக மன்னிப்புக் கோரி, காவல் துறை நடவடிக்கைக்கு உள்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.