மாநில, பிராந்திய மொழிகளை மத்திய அரசு புறக்கணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புதுச்சேரி மாநில முதல்வர் வே. நாராயணசாமி தெரிவித்தார்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த தோப்புத்துறை ஆரிஃபா கல்வி நிறுவனங்களின் தலைவர் சுல்தானுல் ஆரிபின் இல்ல திருமண விழா ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில முதல்வர் வே. நாராயணசாமி பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்காக அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய அரசுக்கு திட்ட வட்டமாக தெரிவித்துள்ளோம்.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்களில் தமிழ்மொழி தெரிந்தவர்கள்தான் பணி செய்ய வேண்டும். அதில் அவர்களுக்கு தேர்வு நடத்தி தேர்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், இப்போது நடந்துள்ள தேர்வு முறை முரண்பாடாக அமைந்துள்ளது. ஹிந்தியை திணிக்க மறைமுகமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தவுடன், ஹிந்தியும், ஆங்கிலமும் தான் இருக்க வேண்டும் என்று மாநில மொழிகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
மாநில மொழி புறக்கணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ் தெரியாதவர்கள் கல்லூரிகளுக்கு பணிக்கு வந்தால் அவர்கள் எப்படி பாடம் நடத்த முடியும். ஏற்கெனவே, நாம் பார்த்திருக்கிறோம் தமிழகம், புதுச்சேரியில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்தது, மொழிப்போர் தியாகிகள் சிறை சென்றனர். நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல விவகாரங்களில் தென்மாநிலங்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
மக்கள் விரும்பாத திட்டங்களை கொண்டுவந்து மத்திய அரசு மக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வியை சந்தித்தது. இதை படிப்பினையாக மத்திய பாஜக அரசு உணந்துகொண்டதாக தெரியவில்லை. இந்தியா எல்லா மதமும், எல்லா மொழியும் கொண்ட நாடு. இங்கு மாநில, பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்
நாராயணசாமி.