நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நாகை பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் மாலை லேசான மழை பெய்தது. இதைத் தொடர்ந்து இரவு இரவு 8.30 முதல் 10 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக, நாகை வீதிகள் மற்றும் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதேபோல், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், தேவூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 8 மாதங்களாக மழையைக் கண்டிராத இப்பகுதி மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மானாவாரி நெல் சாகுபடிக்கு உழவுப் பணிகளை மேற்கொள்ளவும், நிலங்களை சீர்படுத்தவும் இந்த மழை மிகவும் உதவியாக இருக்கும் என நாகை மாவட்டம் திருமருகல் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.