நாகப்பட்டினம்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: நாகையைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரிடம் என்.ஐ.ஏ.விசாரணை

15th Jul 2019 02:10 AM

ADVERTISEMENT

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக நாகையைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரிடம் தேசியப் புலனாய்வு முகமையினர் ஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21-ஆம் தேதி நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 251 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்புக்கு தமிழகத்தில் செயல்படும் ஒரு அமைப்பு ஆதரவாக செயல்பட்டு நிதி திரட்டியதாக என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு முகமைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, நாகை மாவட்டம், சிக்கல் பிரதான சாலையைச் சேர்ந்த யூனூஸ் மரைக்காயர் மகன் ஹசன்அலி (30), மஞ்சக்கொல்லை பகுதியைச் சேர்ந்த முஹம்மது மகன் ஹாரீஸ் முஹம்மது (34) ஆகிய இருவரின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமையினர் சனிக்கிழமை சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது பென்டிரைவ்கள், மடிக்கணினி, சர்வதேச அளவில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் நறுக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
மேலும் ஒரு இளைஞரிடம் விசாரணை: இதன்தொடர்ச்சியாக, நாகை மஞ்சக்கொல்லை ஜூப்ளி தெருவைச் சேர்ந்த ஷேக்  இஸ்மாயில் மகன் தெளபிக் முஹம்மது (33) என்பவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தேசியப் புலனாய்வு முகமையினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர், தெளபிக் முஹம்மதுவை நாகை மாவட்ட காவல் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை செய்தபின், அவர் விடுவிக்கப்பட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT