நாகப்பட்டினம்

புத்துயிர் பெறுகிறது: மழைநீர் சேகரிப்பு..!

12th Jul 2019 10:13 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் புனரமைக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2001-2006 வரையிலான காலகட்டத்தில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், வீடுகள், அரசு கட்டடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டாயம் அமைக்க வேண்டும் என சட்டம் கொண்டுவந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தனர். மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டதால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், காலப்போக்கில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை தொடர்ந்து பராமரிக்கும் பணிகளில் பொதுமக்களும், அதிகாரிகளும் ஈடுபடாததால் இத்திட்டம் முடங்கிப்போனது.
தற்போது, தமிழகம் முழுவதும் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு, கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதளத்துக்குச் சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால்,  சுமார் 10 ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாட்டை சந்திக்கும் என நீரியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஏரி, குளங்களை சொந்த செலவில் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசும் நிலத்தடி நீரை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் அமைப்புகளை மீண்டும் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார் மேற்பார்வையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 37 ஊராட்சிகளில் ஒன்றிய ஆணையர் கஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர் முத்துகுமார் ஆகியோர் மேற்பார்வையில் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள்,  ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் அரசு கட்டடங்கள் மற்றும் ஊராட்சிகளில் பழுதடைந்து காணப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஊராட்சிகளில் செயலர், பணிதளப் பொறுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக் கூறி வருகின்றனர். இப்பணி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT