நாகப்பட்டினம்

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

12th Jul 2019 10:11 AM

ADVERTISEMENT

திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராம.சேயோன், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரனுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மனு: திருவாவடுதுறை ஆதீனத்தில் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சார்ய சுவாமிகள் ஆதீன கர்த்தராக விளங்கி வருகிறார். கடந்த 2002-ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனக் கர்த்தராக ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பராமாச்சார்ய சுவாமிகள் அருளாட்சியில் இருந்தபோது, அப்போதைய ஆதீன இளவரசாக இருந்த காசி விஸ்வநாத பண்டார சந்நிதி கொலை முயற்சியில் ஈடுபட்டு, கைதாகி பிரச்னை ஏற்பட்டது. அதுமுதல் திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானத்துக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் பாதுகாப்புக்காக நியாயமான கட்டணம் கோரப்பட்டு, திருமடத்தின் சார்பில் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் 2017-ஆம் ஆண்டு அதிக கட்டணம் கோரி காவல் கண்காணிப்பாளரிடம் இருந்து கடிதம் வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து, திருவாவடுதுறை ஆதீனத்துக்கு இலவசமாக போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சம்பந்தமாக 8 வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க கடந்த பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 
இந்நிலையில், ஆதீனக் கர்த்தருக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு ஆதீன நிர்வாகிகளால் வியாழக்கிழமை திரும்ப அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, காவல்துறை உளவுப்பிரிவு அறிக்கையின்படியும், மற்ற அசாதாரண சூழ்நிலையாலும் திருவாவடுதுறை ஆதீனக் கர்த்தருக்கு போலீஸ் பாதுகாப்பு அவசியம் தேவை. 
எனவே, மதத் தலைவர்களுக்கு கட்டணம் இல்லாமல் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது போன்று, திருவாவடுதுறை ஆதீனத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT