நாகப்பட்டினம்

சீர்காழி அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் சாவு

4th Jul 2019 08:52 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், சீர்காழி அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் புதன்கிழமை உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. 
சீர்காழி அடுத்த சீயாளம் மேட்டுத்தெரு அருகில் தனியாருக்குச் சொந்தமான தைலமரத் (யுகலிப்டஸ்) தோட்டத்தில் 8 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. அபூர்வ கொம்புகள் கொண்ட மான் இறந்தது குறித்து சீர்காழி வனச்சரகர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வனச்சரக அலுவலர்கள் அங்கு வந்து இறந்த மானை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இப்பகுதியில், கடந்த மாதம் 20-ஆம் தேதி தனியார் பருத்தி வயலுக்குச் சென்ற மான் ஒன்று வலையில் சிக்கி இறந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு மான் இறந்துள்ளது பொது மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. மான்கள் தண்ணீர் தேடி வயல்வெளிகளுக்குச் செல்வதால் இந்நிலை ஏற்படுவதாகவும், புள்ளிமான்களை நாய்கள் கடித்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். முந்திரிக்காட்டில் அதிகளவிலான புள்ளிமான்கள் இருக்கிறது, இவற்றை பாதுகாத்து பராமரிக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT