மயிலாடுதுறை அருகே மேலையூர் அழகுஜோதி அகாதெமி பள்ளியில், வனப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பசுமை உறுதியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
பசுமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். முன்னதாக, மரக்கன்றுகளை வைத்து இந்திய வரைப்படத்தை மாணவர்கள் ஆர்வமுடன் தயார் செய்திருந்தனர். தொடர்ந்து, புவி வெப்பமயமாதலைத் தடுத்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மண் வளத்தைக் காக்கவும், மழை நீரை சேமிக்கவும், மரம் நடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் சிவக்குமார், முதல்வர் நோயல்மணி ஆகியோர், மாணவர்கள் தங்கள் வீடுகளில் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாணவ, மாணவியருக்கும் மரக்கன்றுகள் வழங்கினர்.