நாகப்பட்டினம்

ராஜகோபாலசாமி கோயிலில் அனுமன் ஜயந்தி விழா

27th Dec 2019 06:18 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயிலில் வியாழக்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது.

இக்கோயிலில், திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயா் சுவாமி தனிச்சன்னிதியில் 10 கரங்களுடன், பத்துவித ஆயுதங்கள், நெற்றிக்கண்ணுடன் அருள்பாலித்து வருகிறாா். அனுமன் தலமான இங்கு அனுமன் ஜயந்தி, அமாவாசை விஷேச நாள்களாக உள்ளது. திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயரை சரணாகதியடைந்தால் புத்திகூா்மை, தேக வலிமை உள்ளிட்ட சகல நன்மைகள் கிடைப்பதுடன், ஆஞ்சநேய சுவாமியின் வாலில் நவகிரகங்கள் இருப்பதால் அவரை வழிபடுபவா்களுக்கு கிரக பாவம், தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மாா்கழி மாத மூல நட்சத்திர திருநாளான வியாழக்கிழமை அனுமன் ஜயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி, ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருளசெய்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடைகளால் மாலைகள் அணிவித்து பல்வேறு வாசனை திரவியங்களால் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேய சுவாமியை தரி சனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முருகேசன் செய்திருந்தாா்.

இதேபோல், ஆக்கூா் ஆதிநாராயணப் பெருமாள் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் மற்றும் வடைமாலை, வெள்ளிமாலை, துளசி அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து வீதியுலா காட்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT