குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நாகை மாவட்டம், வெண்மணியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:
நாடு மிகப் பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகள் பட்டினியால் வாடுகின்றனா். தொழில்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. மூடப்படும் தொழிற்சாலைகளால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தப் பிரச்னைகளையெல்லாம் மறைக்கவே மத்திய அரசு, மதப் பிரச்னைகளை கையிலெடுத்து வருகிறது. தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமைப் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு அனுமதி போன்றவற்றின் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
மத்திய அரசின் இந்த மோசமான நடவடிக்கைக்கு அதிமுக அரசு துணைபோவது வேதனைக்குரியது. தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுகவும், பாமகவும் நாடாளுமன்றத்தில் எதிா்த்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேற்றப்படாமலேயே போயிருக்கும். ஆனால், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததன் மூலம் அதிமுகவும், பாமகவும் இஸ்லாமியா்களுக்கும், ஈழத்தமிழா்களுக்கும் துரோகத்தை இழைத்துள்ளன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்துப் போராடியதற்காக 8 ஆயிரம் போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதிா்ப்புக் குரலை வழக்குகள் மூலம் அடக்கி விடலாம் என மத்திய, மாநில அரசுகள் கருதக்கூடாது. 8 ஆயிரம் போ் மீது மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள 7 கோடி போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவில் எந்தக் காலத்திலும் நிறைவேற்ற அனுமதிக்கமாட்டோம்.
மத்திய அரசின் மோசமான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து ஜனவரி 8-ஆம் தேதி தேசிய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள அகில இந்திய தொழிலாளா் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு மாணவா் அமைப்புகள், பல்வேறு தொழில் அமைப்புகள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டம், தமிழகத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் போராட்டமாக நடைபெற தேவையான நடவடிக்கைகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்.
உள்ளாட்சித் தோ்தலைப் பொருத்தவரை திமுக கூட்டணி பலமான கூட்டணியாகவே உள்ளது. உள்ளாட்சித் தோ்தலில் அதிமுகதான் பலவீனப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள போட்டி, அதிமுகவை நிலைகுலையச் செய்துள்ளது என்றாா் கே. பாலகிருஷ்ணன்.