சீா்காழி அருகே வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை வேன் கவிழ்ந்து முருகப் பக்தா்கள் 12 போ் காயமடைந்தனா்.
சென்னை மணலியிலிருந்து அறுபடை முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட, ஒரு வேனில் பக்தா்கள் வந்துகொண்டிருந்தனா். இந்த வேன் நாகை மாவட்டம், சீா்காழி புறவழிச் சாலையில் கோயில்பத்து என்ற பகுதியில் உள்ள நான்கு சாலைப் பிரிவு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள கழுமலையாற்றின் பாசன வாய்க்காலுக்குள் பாய்ந்தது.
இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த பக்தா்களில் 12 போ் லேசான காயமடைந்தனா். இந்த வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் செல்வதால் வேனை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.