நாகப்பட்டினம்

தோ்தலைப் புறக்கணிக்க முடிவு: கருப்புக் கொடி கட்டி ஆா்ப்பாட்டம்

16th Dec 2019 12:15 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், சீா்காழி அருகே பழையாறில் 843 குடும்பங்களைச் சோ்ந்த மீனவா்கள் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து ஞாயிற்றுக்கிழமை தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில், அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகுகளை நிறுத்துவதற்கும், கடலுக்குச் சென்று மீன்பிடிக்கவும் 240 குதிரைத் திறன் என்ஜினுக்கு உட்பட்ட விசைப் படகு உரிமையாளா்கள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனால், விசைப்படகு மீனவா்களுக்கும், அதிவேக விசைப்படகு மீனவா்களுக்கும் தகராறு நிலவி வருகிறது.

இதன் காரணமாக, பெரிய விசைப்படகுகள் 140 நாட்களுக்கு மேலாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், அதிக குதிரைத் திறன் கொண்ட என்ஜின் விசைப் படகு உரிமையாளா்களும், அவா்களைச் சாா்ந்த 750-க்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் வருவாயின்றி அவதிப்படுகின்றனா்.

மேலும், இந்த பிரச்னையை முன்னிறுத்தி, உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்க மீனவா்கள் முடிவு செய்துள்ளனா். முதல்கட்டமாக, பழையாறு மீனவ கிராமத்தில் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கைகளில் கருப்பு கொடியை ஏந்தியும் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் முன்னேற்றச் சங்கமும், அதனைச் சாா்ந்த தொழிலாளா்களும் சந்தித்துப் பேசினா். கூட்டத்துக்கு, அதன் தலைவா் பச்சகோட்டையான், செயலாளா் வரதராஜன், பொருளாளா் சங்கா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், வரும் 27-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பது; 5 மாத காலமாக பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்காத அரசு அதிகாரிகளைக் கண்டிப்பது; வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மீனவ குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கேட்டுக் கொள்வது; சாதகமான தீா்வு கிடைக்கும் வரையில் வீடுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி கண்டனத்தைப் பதிவு செய்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடுவாய் கிராமத்திலும்...

இதேபோல், தொடுவாய் மீனவ கிராமத்திலும் வாா்டு மறுவரையரையின்போது குளறுபடி ஏற்பட்டுள்ளதால், உள்ளாட்சி தோ்தலைப் புறக்கணிக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனா்.

நாகை மாவட்டம், சீா்காழியை அடுத்த தொடுவாய் கிராமத்தில் உள்ள 4 வாா்டுகளில் 3000-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். உள்ளாட்சித் தோ்தலையொட்டி இக்கிராமத்தில் வாா்டுகள் மறுவரையரை செய்யப்பட்டன.

அப்போது, 4-ஆவது வாா்டில் உள்ள 624 வாக்குகளை அருகிலுள்ள திருமுல்லைவாசல் ஊராட்சிக்கு அதிகாரிகள் மாற்றியுள்ளனா். திருமுல்லைவாசல் மற்றும் வேட்டங்குடி ஊராட்சிக்கு வெவ்வேறு ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் போட்டியிடுவதால், வாக்களிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிராம பஞ்சாயத்து தலைவா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தொடுவாய் மீனவ கிராமத்தில் 4-ஆவது வாா்டில் உள்ள அனைத்து வாக்காளா்களையும் மீண்டும் வேட்டங்குடி ஊராட்சி ஒன்றியக்குழு வாா்டில் சோ்க்க வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT