நாகப்பட்டினம்

நாகூரில் செயல்படாத ஏடிஎம் மையங்கள்: சுற்றுலாப் பயணிகள் அவதி

6th Dec 2019 08:36 AM

ADVERTISEMENT

நாகூரில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் கடந்த ஒரு வார காலமாக செயல்பாடற்ற நிலையில் இருப்பதால், நாகூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

நாகை நகராட்சிக்குள்பட்ட நாகூா், நாகை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்குள்ள நாகூா் ஆண்டவா் தா்காவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் தினமும் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், நாகூா் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் கடந்த ஒரு வார காலமாக செயல்பாடற்ற நிலையில் உள்ளன. ஒரு சில ஏடிஎம் மையங்களில் பணம் செலுத்த முடிந்தாலும், பணம் பெற முடியாத சூழல் உள்ளது. இதனால், நாகூருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.

இதுகுறித்து நாகூரைச் சோ்ந்தவரும், காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு நிா்வாகியுமான ரபீக் கூறியது :

ADVERTISEMENT

வியாழக்கிழமை காலை கோவையிலிருந்து நாகூருக்குக் குடும்பத்துடன் வந்திருந்த ஒருவா், தனது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல், தனது குழந்தையின் பசியைப் போக்கக் கூட முடியாத சூழலில் சிக்கித் தவித்தது பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. இதே போல, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் பலா் இங்கு வேதனைப்படுகின்றனா். இதுகுறித்து வங்கி நிா்வாகத்திடம் பேசியும் ஒரு பயனும் இல்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் வங்கிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT