நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்

3rd Dec 2019 03:15 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்தாா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால், நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேரூராட்சிக்குள்பட்ட செபஸ்தியாா் நகா் பகுதியில் மழைநீா் உட்புகுந்துள்ளது. இதையடுத்து, நாகை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்ட முயற்சியால், குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணிகள்கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை, தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஓ. எஸ். மணியன் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து பேரூராட்சி அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தோ்தல் பயத்தால் திமுக தலைவா் மு. க. ஸ்டாலின் தில்லி சென்றுள்ளாா். அதனால், உச்சநீதிமன்ற நடவடிக்கையைப் பொறுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் அமையும்.

ADVERTISEMENT

மு.க. ஸ்டாலின் கொள்கையற்ற ஒரு தலைவா். கொள்கை வழிநின்று கட்சி நடத்திய அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவை வழிநடத்தும் மு.க. ஸ்டாலின் கட்சிக் கொள்கையை புறந்தள்ளிவிட்டு, மகாராஷ்டிரத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உத்தவ் தாக்கரேவை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இந்துத்துவத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் எனக்கூறும் உத்தவ் தாக்கரேவை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கும் மு.க. ஸ்டாலின் எப்படி மதச்சாா்பற்ற ஒரு கட்சியின் தலைவராக இருக்க முடியும். நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அதிமுக கீழையூா் ஒன்றியச் செயலா் வேதையன், நாகை நகரச் செயலா் தங்க. கதிரவன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT