நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக போலீஸார் மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வேதாரண்யத்தில் அண்மையில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் கார் தீ வைத்து எரிக்கப்பட்டு, அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பான, வழக்குகளில் இரு பிரிவினரை சேர்ந்த 35 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், காருக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பாலு மகன்கள் கணேஷ்குமார் (21), விஜயராகவன் (27), ரவிச்சந்திரன் மகன் அரவிந்திரன் (25) ஆகிய மூவரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் போலீஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பேருந்து நிலையம் வளாகத்தில் அரசு சார்பில் புதிதாக நிறுவப்பட்ட அம்பேத்கரின் சிலைக்கு அளிக்கப்பட்டுள்ள பலத்த பாதுகாப்பு தொடர்ந்து வருகிறது. சிலையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்குள் நிறுத்தப்படும் போலீஸார் வெயிலின் தாக்கத்தில்அவதியுற நேர்ந்தது. இதையடுத்து, அந்த வளாகத்தில் வியாழக்கிழமை துணிப் பந்தல் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியை தொடர்ந்து வருகின்றனர்.