நாகப்பட்டினம்

பூம்புகார் தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படுமா?

30th Aug 2019 09:59 AM

ADVERTISEMENT

பூம்புகார் மேலையூரில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையத்துக்கு, சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், பூம்புகார் மற்றும் திருவெண்காடு பகுதியைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், குடிசை வீடுகள் அதிகளவில் உள்ளன. கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோல் போர்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும். எதிர்பாராதவிதமாக நேரிடும் தீ விபத்துகளின்போது, தகவலின்பேரில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள சீர்காழி அல்லது 25 கி.மீ. தொலைவில் உள்ள பொறையாறு ஆகிய இடங்களில் இருந்துதான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டும். இதுபோன்று தொலைவிலிருந்து வாகனங்கள் வருவதற்குள் பெருமளவில் பொருள் சேதம் ஏற்பட்டு விடும்.
பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டங்களால், தமிழக அரசு கடந்த 1998 -ஆம் ஆண்டு பூம்புகாரில் தீயணைப்பு நிலையத்தை தொடங்கியது. இந்த நிலையம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை வாடகை கட்டடத்திலேயே இயங்கி வருவது மிகவும் கொடுமையான விஷயமாகும்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்த தீயணைப்பு நிலையம் மூன்று இடங்களுக்கு இடமாறியும் வாடகை கட்டடத்திலேயே செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலையத்தில் ஒரு அலுவலர் உள்ளிட்ட 17 தீயணைப்பு வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தீயணைப்பு நிலையத்தின் மூலம் திடீரென ஏற்படும் தீ விபத்துகள், பூம்புகாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கும்போது சென்று காப்பற்றுதல், திருவிழாக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குதல், சாலை விபத்துகளில் காயமடையும் நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட அளப்பரிய பணிகளை உடனுக்குடன் செய்து வருகின்றனர்.
பூம்புகாரில் தீயணைப்பு நிலையம் வந்த பிறகு, சுற்றுவட்டாரப் பகுதியில் நேரிடும் தீ விபத்துகளின்போது, சேத மதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல், செம்பனார்கோயில் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால், அப்பகுதியில் நேரிடும் தீ விபத்துகளின்போது அங்கு சென்றும்
பணியாற்றுகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் பூம்புகார் தீயணைப்பு நிலையத்துக்கு, சொந்தக் கட்டடம் இல்லாதது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய வாடகை  கட்டடம் குறைந்த பரப்பளவு கொண்டதாக இருப்பதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த சிரமத்துடனேயே பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், கட்டடத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக ஷெட்டில்தான் தீயணைப்பு வாகனத்தை நிறுத்தும் நிலை உள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை அமைப்பின் தலைவர் கே.ஜி. ராமச்சந்திரன் கூறியது:
மக்களின் பாதுகாப்பில் மிக முக்கிய துறையாக விளங்கும் தீயணைப்புத் துறைக்கு போதிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும். பூம்புகார் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடங்கள் அதிகளவில் இருந்தும், கடந்த 20 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகும். தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தரக் கோரி, பலமுறை மனுக்கள் அளித்தும் நாகை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் உரிய இடத்தை தேர்வு செய்து தீயணைப்பு நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்றார்.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன்: பூம்புகார் மேலையூரில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையம் போதிய அடிப்படை வசதிகளின்றி உள்ளது. மழைக் காலங்களில், தீயணைப்பு நிலைய கட்டடத்துக்குள் மழைநீர் சென்றுவிடுவதால் வீரர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். கழிவறை வசதிகூட போதிய அளவில் இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் பூம்புகார் தீயணைப்பு நிலையத்துக்கு, நவீன வசதிகளுடன்கூடிய சொந்தக் கட்டடம் கட்டித் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT