நாகப்பட்டினம்

பாரபட்சமின்றி உழவு மானியம் வழங்கக் கோரி நாளை ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பேட்டி

30th Aug 2019 09:55 AM

ADVERTISEMENT

பாரபட்சமின்றி உழவு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக. 31) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர்
 பெ. சண்முகம் தெரிவித்தார்.
நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்க சிறப்புக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :  மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாள்களாகியும், கடைமடை பகுதிகளுக்கு இதுவரை காவிரி நீர் வந்தடையவில்லை. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட பின்னர் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது ஏற்புடையது இல்லை. எனவே, உடனடியாக தூர்வாரும் பணிகளை நிறுத்தவும், சம்பா சாகுபடி பணிகளுக்குப் பின்னர் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மேட்டூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விடவேண்டும். வெண்ணாற்றுப் பாசனப் பகுதிகளுக்கான ஆற்றுப் பாசனத்தை உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு சாகுபடி தொகுப்பு திட்டம் எதையும் அறிவிக்காமல், அரசு உழவு மானியத்தை மட்டும் அறிவித்துள்ளது. ஏக்கருக்கு ரூ. 600 வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அரசு உழவு மானியத்தை உயர்த்தி வழங்குவதுடன்,  எவ்வித உச்சவரம்பும் இல்லாமல் சம்பா சாகுபடி பரப்பு முழுமைக்கும் உழவு மானியம் வழங்க உத்தரவிட வேண்டும்.  நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி மேற்கொண்டு, அறுவடை செய்யப்பட்டுள்ள நெல் பயிர்களை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் அவர்.
சிறப்புக் கூட்டம்: முன்னதாக நடைபெற்ற விவசாயிகள் சங்க சிறப்பு கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ. சண்முகம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ. லாசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் நாகை மாலி, கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் வி. மாரிமுத்து, விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். துரைராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT