நாகப்பட்டினம்

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி: வேளாங்கண்ணி பேராலய  விழாவுக்குக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு; அமைதியாக நடந்தது கொடியேற்றம்

30th Aug 2019 09:56 AM

ADVERTISEMENT

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் வேளாங்கண்ணியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்களால் தமிழகத்தின் முக்கிய பகுதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய உளவுப் பிரிவு அண்மையில் எச்சரித்திருந்தது. இந்த எச்சரிக்கையில்,  நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்துக்கும் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில், பல லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம் என்ற நிலையில், பெருவிழா தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பாக வெளியான இந்த அச்சுறுத்தல் உத்தரவு போலீஸாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இதையடுத்து,  ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதலே வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாகனத் தணிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, தீவிர சோதனைகளுக்குப் பின்னரே வெளியூர் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல, வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 6 இடங்களில் போலீஸார் சோதனைச் சாவடிகளை அமைத்து, 24 மணி நேர கண்காணிப்பில் 
ஈடுபட்டனர். 
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற வேளாங்கண்ணி பேரலாய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றத்தின் போது 700 போலீஸார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், நிகழாண்டில் 1,800 போலீஸாரும், 300 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், வேளாங்கண்ணியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 65 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டன.
மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழுக்கள் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டனர். பேராலயத்துக்கு வரும் பக்தர்களின் உடமைகள் முழுமையான சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டன. 
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் எனக் கருதப்பட்ட நிலையில், கடந்த ஆண்டை விஞ்சிய நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நிகழாண்டின் திருக்கொடியேற்றத்தில் பங்கேற்றனர். 
இருப்பினும், குறிப்பிடத்தக்க விரும்பத் தகாத நிகழ்வுகள் ஏதுமின்றி, பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் சிறப்பாகவே நிகழ்ந்தேறியதற்கு காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஓர் முக்கிய காரணமாக இருந்தது.  
மக்கள் கூட்டத்தால் நிரம்பிய வீதிகள்:  திருக்கொடியேற்றத்தையொட்டி,  பேராலயம் வளாகம், வீதிகள் , கடற்கரை, பேருந்து நிலையம்,  ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தன. தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து  வேளாங்கண்ணிக்கு வந்து செல்லும் வாகனங்கள் பரவை மற்றும் செருதூர் பகுதியில் நிறுத்தப்பட்டன. பேருந்துகள், நாகை-  தூத்துக்குடி கிழக்கு கடற்கரைசாலையில்  நிறுத்தப்பட்டு, அங்கிருந்து இயக்கப்பட்டன.
நாகை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் 20 க்கும் மேற்பட்ட இடங்களில்  மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும்  மருத்துவ  முதலுதவிகள் மற்றும்  சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT