நாகை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருமருகல் குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே. குணசேகரன் தலைமை வகித்துப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். வயது அடிப்படையில் மாணவ, மாணவிகளை 3 பிரிவுகளாகக் கொண்டு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. 28 பள்ளிகளில் இருந்து 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர். ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை, நாகை மாவட்டக் கல்வி அலுவலர்கள், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அலுவலர்கள், விளையாட்டுப் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.