திருமருகலில் குளம் தூர்வாரும் பணியின்போது, உடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
திருமருகலில் உள்ள சீராக்குளம், நாகை சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 25-ஆம் தேதி ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றபோது, குளத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மருங்கூர், நெய்க்குப்பை, சாட்டியக்குடி, கீழ்வேளுர், தலைஞாயிறு ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்து குடிநீர் செல்வதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் க. அன்பரசு, ஆர்.ஜி. இளங்கோவன், ஒன்றியப் பொறியாளர் செல்வம், ஊராட்சிச் செயலர் சிவக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.