வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடைபெற்றது.
வேதாரண்யம் தாணிக்கோட்டகம் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் மா. முத்துராமலிங்கம், விவசாய சங்கத் தலைவர் கோவை. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று, சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பூம்புகாரில்...
பூம்புகாரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பூம்புகார் தருமகுளத்தில் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர், பூம்புகார்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்துசென்றனர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளர் சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சீர்காழியில்...
சீர்காழியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் ராஜாராமன் தலைமை வகித்தார்.
செயலாளர் மணிவண்ணன், துணைச் செயலாளர் சுதா, பொருளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன
முழக்கமிட்டனர்.
மேலும் 7 பேர் கைது
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஏற்கெனவே 28 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யத்தில் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக, திங்கள்கிழமை மாலை வரை இருதரப்பினரையும் சேர்ந்த 28 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முக்கிய குற்றவாளிகளான வேதாரண்யம் டிடிபி சாலை பகுதியைச் சேர்ந்த ஆர். பாண்டியராஜன் (33), கடிநெல்வயல், நடுக்காடு லக்கட் என்ற லெனின் (25) மற்றும் காமராஜ், வேங்கை தமிழன் உள்பட 7 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் தப்பட்டனர்.
இவர்களை செப்டம்பர் 9-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி சீனிவாசன் உத்தரவிட்டத்தைத் தொடர்ந்து 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.