நாகப்பட்டினம்

காரைக்கால் பகுதியில் படித்த தமிழகப் பெண்களுக்கும் திருமண உதவித்தொகை வழங்கப்படுமா? எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

28th Aug 2019 07:17 AM

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்துக்குள்பட்ட காரைக்கால் பகுதியில் படித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழை பெண்களுக்கும் திருமண நிதியுதவி வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் திருமணத்துக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், குறிப்பிடத்தக்கது மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையாளர் நினைவு ஏழை விதவையர் மகள் நிதியுதவித் திட்டம் ஆகியவையாகும்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திருமண நிதியுதவித் திட்டங்கள் மூலம் 1999-ஆம் ஆண்டுகளில் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருமண நிதியுதவித் தொகையை மேலும் உயர்த்தி, கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைப் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சியோ அல்லது தோல்வியோ அடைந்திருந்தால் ரூ. 25 ஆயிரமும்,  8 கிராம் தங்கமும் வழங்கப்படும். பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் 8 கிராம் தங்கமும் தமிழ அரசால் வழங்கப்படும். இதன்மூலம் ஏழை குடும்பத்தினர் பெரிதும் பயன்பெற்றுவருகின்றனர்.

ADVERTISEMENT

ஆனால், திருமருகல் ஒன்றியத்தைச் சேர்ந்த திட்டச்சேரி, அகரக்கொந்தகை, வாழ்மங்கலம், கொத்தமங்கலம், கட்டுமாவடி, தண்டாளம், குத்தாலம், நரிமணம், தேவங்குடி, மத்தியக்குடி மற்றும் இடையாத்தங்குடி, ஏர்வாடி, கிடாமங்கலம், கணபதிபுரம், சேஷமூலை, ஆலத்தூர், அருள்மொழிதேவன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அருகில் உள்ள காரைக்கால், திருப்பட்டினம், விழுதியூர் உள்ளிட்ட புதுச்சேரி மாநில எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 10 -ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கின்றனர்.

இவ்வாறு புதுச்சேரிக்குள்பட்ட பகுதிகளில் படித்த மாணவிகளுக்கு தமிழக அரசு செயல்படுத்தும் திருமண நிதியுதவித் திட்டம் பொருந்தாது என்று கூறுகின்றனர். இது ஏற்புடையது அல்ல. எனவே,  தமிழகத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பப் பெண்கள் புதுச்சேரி மாநிலத்துக்குள்பட்ட பகுதிகளில் படித்தாலும் அவர்களுக்கும் திருமண நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கொத்தமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி விவேகானந்தன் கூறும்போது, "எங்கள் பகுதிக்கு அருகில் உள்ள புதுவை மாநிலப் பகுதியில் இங்குள்ள மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு, புதுச்சேரி மாநிலத்தில் எந்தவித நலத்திட்ட உதவிகளும் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழகத்திலும் உதவிகள் மறுக்கப்படுவது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்தார். 

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியது: புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் பயிலும் , நாகை மாவட்ட மாணவிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் திருமண நிதியுதவி வழங்கப்படவில்லை. இப்பிரச்னை குறித்து நாகை எம்.எல்.ஏ. தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT