வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, நாகை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
நாகையை அடுத்த பாப்பாகோவிலில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் பேரறிவாளன் தலைமை வகித்தார். 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தால், புத்தூர்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதேபோல், கீழ்வேளூர் கடைத்தெரு பகுதியில் கட்சியின் நிர்வாகி சேகர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின், நாகை சட்டப் பேரவைத் தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தனர்.
சீர்காழியில்...
சீர்காழியில் புதிய பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார் மறியலை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். இருப்பினும் போராட்டம் தொடர்ந்ததால், அங்கிருந்த 40 பேரையும் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இதேபோல், சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் வட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில்...
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர்கள் ராம.சேயோன், வேலு. குபேந்திரன் உள்ளிட்ட திரளானோர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
இதேபோல், சேந்தங்குடியில் நீலப்புலிகள் இயக்கத்தினர், அதன் மாவட்ட இளைஞரணி செயலாளர் கபிலன் தலைமையில், மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார் தலைமையில் கச்சேரி சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மணல்மேடு கடைவீதியிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் வட்டம் கண்டனம்: அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பெரியார், அம்பேத்கர், கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
செம்பனார்கோவிலில்...
செம்பனார்கோவில் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் அறிவழகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியப் பொறுப்பாளர் யோ. ஸ்டாலின், உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர். இதேபோல், ஆக்கூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அதன் மாவட்ட துணைத் தலைவர் டி.சிம்சன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமருகலில்...
திருமருகலில் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜவஹர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திட்டச்சேரி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
குத்தாலத்தில்...
குத்தாலம் வட்டம், எலந்தங்குடி பேருந்து நிறுத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் மா. ஈழவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்ட சமூக நல்லிணக்கப் பேரவை செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனால், மயிலாடுதுறை -திருவாரூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.