நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி பெருவிழா: அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஆட்சியர்

23rd Aug 2019 06:35 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டார்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, வேளாங்கண்ணி சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற, பேராலய ஆண்டுப் பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது :
வேளாங்கண்ணி பேராலாய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, பல்வேறு மண்டலங்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் குறித்த தகவல் பலகைககள் ஆங்காங்கே வைக்கப்படும். பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில், ஒருவழிச் சாலை போக்குவரத்தை ஏற்படுத்த போக்குவரத்துக் காவல் துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
கடற்கரை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து 24 மணி நேரமும் பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வாகனங்களை ரெக்கவரி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த முன்னேற்பாடுகள் செய்யப்படும்.  ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்தி உறுதி செய்யவும், ஆட்டோக்களுக்கு அனுமதி வில்லை வழங்கவும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
அனைத்து வகையான மீட்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் தீயணைப்புப் படையினர் விழா நாள்களில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அனைத்து உணவகங்களையும் கண்காணிக்க உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
சுகாதாரத் துறை மூலம் தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைத்து சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் ஈடுபடுத்தி, பொதுமக்களுக்கு 24 மணி நேர மருத்துவ சேவையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போல, அவசர கால மருந்துகளை போதுமான அளவு கையிருப்புக் கொள்ளவும், அவசரகால மருத்துவ ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி கடல் பகுதியில் மீன்வளத் துறையினர் ரோந்து படகுடன் கண்காணிப்பில் ஈடுபடவும், ஆண்கள், பெண்கள் தனித்தனியே குளிக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் எந்தப் பகுதியிலும் பயன்பாட்டில் இல்லை என்பதை உறுதி செய்யவும், குப்பைகள் தேங்காமல் அப்புறப்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலாய ஆண்டுப் பெருவிழாவில் திரளானோர் பங்கேற்பர் என்பதையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அனைத்துத் துறையினரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் சீ. சுரேஷ்குமார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.கே. ராஜசேகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி, நாகை சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் அ. தியாகராஜன், வேளாங்கண்ணி பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர், வட்டாட்சியர் கபிலன், பேரூராட்சி செயல் அலுவலர் மோகனசுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT