நாகப்பட்டினம்

பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகங்கள் சீரமைக்கப்படுமா ?

23rd Aug 2019 06:39 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடி தாலுகா பகுதியில் உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகங்கள் அடிப்படை வசதிகளுடன் சீரமைக்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. 
நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட கிராம மக்கள் வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மனைப் பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.
தரங்கம்பாடி வட்டாட்சியர் தலைமையில் இயங்கும் திருவிளையாட்டம், மேமாத்தூர், காலாமாநல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலகக் கட்டடங்கள் சிதிலமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதனால், கிராம நிர்வாக அலுவலர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். மேலும், அவர்களுக்கு அங்கு கழிப்பறை, குடிநீர், கணினி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 
முழுநேர ஊழியர்களான இவர்கள் தங்களது வழக்கமான பணிகளை முடித்துக்கொண்டு கிராமத்துக்கு சென்று பொது மக்களை சந்தித்து அவ்வப்போது அரசுக்கு தேவையான தகவலையும் திரட்டி வருகின்றனர். தவிர, பொது மக்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு சான்றிதழ்கள் தனியார் மையங்களுக்கு சென்று பணம் செலவு செய்து எடுத்து வந்து கொடுப்பதாக கூறப்படுகிறது. இப்படி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் அலுவலகம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்களும் அச்சத்துடன் பணியாற்றுவதால் சம்பந்தப்பட்ட அரசுத் துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகங்கள் போதிய அடிப்படை வசதிகளுடன் சீரமைக்க வேண்டும். 
அல்லது பல ஆண்டுகள் முன்பு கட்டப்பட்டு பூட்டியே கிடக்கும் நல்ல நிலையில் உள்ள ( விதிமுறைகளுக்குள்பட்டு) கிராம இ-சேவை மையங்களுக்கான கட்டடங்களில் கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
இதுகுறித்து, மனிதநேய ஜனநாயக கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான் கூறியது: தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட பண்டாரவடை, உடையவர்கோவில்பத்து, மடப்புரம் ஆகிய கிராம நிர்வாக அலுவலக கட்டடங்களில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதி இல்லை. இதனால், இந்த அலுவலகத்துக்கு குறை தீர்க்க வருகை தரும் முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் கழிப்பறை மற்றும் குடி நீர் வசதி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். 
ஜனநாயக வாலிபர் சங்க வட்டச் செயலர் மார்க்ஸ் கூறியது: பெரும்பாலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கிராம எல்லைக்குள்பகுதிகளில் அனுமதியின்றி மணல் எடுப்பதை தடுத்து நிறுத்துதல், தேர்தலின்போது தேர்தல் பணிகள் மேற்கொள்வது, மக்கள் தொடர்பு முகாம் நடத்த உரிய பணிகள் மேற்கொள்ளுதல், பாசன ஆதாரங்களை கண்காணித்தல் ஏரிகளிலும் நீர் வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் தடுப்பது ஆகியவற்றை முறையாக பராமரிப்பது இவர்கள் பணியாக 
உள்ளன. 
மேலும், தீ விபத்து, வெள்ளம், புயலின் போது உடனுக்குடன் உயர் அலுவலருக்கு அறிக்கை அனுப்புவது இவர்களுடைய பணியாக இருந்து வருகிறது. இந்நிலையில் இவர்கள் பணியாற்றும் பெரும்பாலான  கிராம நிர்வாக அலுவலக கட்டடங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களாகும். காலமாநல்லூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு இதுவரை மின் இணைப்பு கொடுக்கவில்லை. இதனால், பல்வேறு பணிகள் பாதிக்கின்றன. 
மாத்தூர், கிடங்கல் ஆகிய கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டடங்கள் பழுதடைந்து இருப்பதால் அருகிலுள்ள கிராமப்புற நூலக கட்டடத்தில் இயங்கி வருகின்றன. 
தரங்கம்பாடி தாலுக்காவுக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலங்களில் 50 சதவீதம் பெண்கள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணியாற்றும் இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் கணினி வசதி இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மழை காலம் தொடங்குவதற்கு முன்பு இப்பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டடங்களை சீரமைத்து அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT