நாகப்பட்டினம்

சங்கிலிப் பிணைப்புடன் ஒரு கை நீச்சலில் 10 கி.மீ தொலைவு கடலில் நீந்திய நாகை இளைஞர்

23rd Aug 2019 06:37 AM

ADVERTISEMENT

நாகையைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது ஒரு கையை சங்கிலியால் பிணைத்துக் கட்டிக் கொண்டு,  ஒரு கை நீச்சல் மூலம் கடலில் 10 கி.மீ தொலைவை வியாழக்கிழமை நீந்தி கடந்தார்.
நாகை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சபரிநாதன். நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் பயிலும் இவர், தேசிய, மாநில அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளார். 2014-ஆம் ஆண்டில் நைஜிரீயா நாட்டின் சைப்ரல் நகரில் நடந்த உலகளவிலான பைலாத்தான் போட்டியில் பங்கு பெற்றுப் பதக்கம் பெற்றுள்ளார். 
உலகளவில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், கடந்த 2017-ஆம் ஆண்டு கை மற்றும் கால்களை இரும்பு சங்கிலியால் பூட்டிக் கொண்டு, நாகூர் துறைமுகத்தில் இருந்து நாகை வரையிலான 5 கி.மீ தொலைவை கடலில் 2 மணி நேரம் 20 நிமிடம் 48 நொடிகளில் கடந்து சாதனைப் படைத்தார். 
மேலும் ஒரு சாதனைப் படைக்கும் வகையில், வியாழக்கிழமை காலை வேளாங்கண்ணி கடற்கரையிலிருந்து நாகை வரையிலான 10 கி.மீ தொலைவை இரும்புச் சங்கிலி பிணைப்புகளுடன் சபரிநாதன் நீந்திக் கடந்தார். சுமார் ஒரு கிலோ எடையிலான இரும்பு சங்கிலியைக் கொண்டு ஒரு கையைப் பிணைத்துக் கட்டிவிட்டு, ஒரு கையால் மட்டும் அவர் இந்தத் தொலைவை நீந்தினார். காலை 8 மணிக்கு வேளாங்கண்ணியிலிருந்து கடலில் நீந்தத் தொடங்கிய அவர், 3 மணி நேரம் 17 நிமிட நீச்சலுக்குப் பின்னர்,  நாகை அக்கரைப்பேட்டை பகுதியில் முற்பகல் 11.17 மணிக்குக் கரையேறினார். கரையேறிய மாணவர் சபரிநாதனை கிராம மக்கள்,  தேசியக் கொடி போர்த்தி வரவேற்றனர். 
வில் மெடல் ஆப் ரெக்கார்டு அமைப்பின் தலைவர் கலைவாணி மேற்பார்வையில் அவர் இந்தச் சாதனையை மேற்கொண்டார்.  காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் மாணவரின் நீச்சலைத் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் பிரிவு அலுவலர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறை அலுவலர்கள் மாணவரை வாழ்த்தினர். 
ஆட்சியர் பாராட்டு: சாதனை மாணவர் சபரிநாதனை வியாழக்கிழமை மாலை மாவட்ட ஆட்சியரகத்துக்கு அழைத்து, மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் பாராட்டி வாழ்த்தினார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT