தமிழக அரசு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை கிராம மக்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணல்மேட்டில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்குரைஞர்கள் குழுவினர் வெள்ளிக்கிழமை தெருமுனை பிரசாரக் கூட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் வழக்குரைஞர்கள் கடந்த ஒரு மாதமாக நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம், நீதிமன்றப் புறக்கணிப்பு, மயிலாடுதுறை சட்டப் பேரவை அலுவலக முற்றுகைப் போராட்டம், மாணவர்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்குரைஞர் குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தனி மாவட்ட போராட்டத்தை முழுமையாக கையில் எடுத்து செயல்பட்டு வருகின்றனர்.
அவ்வகையில், தமிழக அரசு மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மணல்மேடு பேரூராட்சி அலுவலகம் முன்பு, மயிலாடுதுறை மாவட்டத்துக்கான வழக்குரைஞர் குழு ஒருங்கிணைப்பாளர் ராம.சேயோன் தலைமையில் குழு நிர்வாகிகள் சிவதாஸ், சிவச்சந்திரன் ஆகியோர் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடத்தி, மணல்மேடு கிராமவாசிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களிடையே கோரிக்கை குறித்து உரையாற்றினர்.
இக்கூட்டத்தில், மணல்மேடு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் நடராஜன், ஸ்ரீநாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர். பின்னர், மயிலாடுதுறை மாவட்ட கோரிக்கை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் அனைவருக்கும்
விநியோகிக்கப்பட்டன.