நாகப்பட்டினம்

நாகையில் அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா

16th Aug 2019 07:32 AM

ADVERTISEMENT

நாகையில் அரசு அலுவலகங்கள் வியாழக்கிழமை 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், துணை காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்,முதன்மைக் கல்வி அலுவலர் கே. குணசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், அலுவலக கண்காணிப்பாளர் ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  நாகை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் எம்.எல். ஏ. தமிமுன் அன்சாரி தேசியக் கொடியை  ஏற்றி வைத்தார். நாகை கலங்கரை விளக்கத்தில் எம்.எல்.ஏ. தமிமுன்அன்சாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
காங்கிரஸ் சார்பில் : நாகை மாவட்ட வர்த்தக காங்கிரஸ்  சார்பில், நாகை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காந்தியடிகள் திருவுவருச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலக்கோட்டைவாசல், அக்கரைக் குளம்  கீழ்கரை, நேதாஜி ரோடு, தோணித்துறை ரோடு,  பெரியக் கடைவீதி, உள்ளிட்ட  இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டன. இதில், இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர். எம். பி. ராஜேந்திர நாட்டார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிர்வாகிகள் சி. குபேந்திரன், ஷியாம் சுந்தர், ஜெகதீசன், உதயசந்திரன்,ராமலிங்கம் மற்றும் கட்சியினர்  கலந்துகொண்டனர். 
கீழையூர் :  கீழையூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில், மீனம்பநல்லூர், கீழையூர்,  திருமணங்குடி ஆகிய   ஊர்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. வட்டார காங்கிரஸ் தலைவர்  ஜி.சுப்பிரமணியன்,   இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆர்.திரிபுரகுமார் மற்றும் எஸ்.வெங்கடேஷ்,  வி. அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நாகை மாவட்டம், காமேஸ்வரத்தில் தமிழ்நாடு முக்குலத்துப் புலிகள் அமைப்பின் சார்பில், அந்த அமைப்பின்  நிறுவனர் ஆறு. சரவணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். நாகை மாவட்டம், சித்தாய்மூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு பால்  உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பாஜக  எஸ். சி. அணி நாகை மாவட்டத் தலைவர் ஏ.டி,வி. லிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். சங்கத் தலைவர் ஷகிலா மற்றும்  இயக்குநர்கள், பால் உற்பத்தியாளர்கள்  கலந்துகொண்டனர்.
 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் : ஸ்ரீஅறுபடை தர்மசிந்தனை அறக்டகட்டளை சார்பில்  நாகை  மாவட்டத்தைச் சேர்ந்த 161 விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்  வழங்கப்பட்டன. மரக்கன்றுகள் அறக்கட்டளையைச்  சேர்ந்த நேசமணி வழங்கினார்.
பூம்புகாரில்...
செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய ஆணையர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், எம்.எல்.ஏ. பவுன்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருண், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
சீர்காழியில்...
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையர் கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சீர்காழி சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு நோட்டு, பேனா, தேர்வு அட்டை ஆகியவற்றை வழங்கினார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ரெஜினாராணி, மேலாளர் சசிக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: சீர்காழி புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாவட்ட உரிமையியல் நீதிபதி உமாமகேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், மூத்த வழக்குரைஞர்கள் சந்திரமோகன், வெங்கடேசன், செல்வராஜ், வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
சீர்காழி காவல் நிலையத்தில்: காவல் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், டி.எஸ்.பி. வந்தனா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், காவல் ஆய்வாளர் டெல்லிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், சீர்காழி நகராட்சியில் நடைபெற்ற விழாவில், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அடுத்து, சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் அதன் தலைவர் பாலாஜி தேசியக் கொடியை ஏற்றினார். 
வேதாரண்யம் பகுதியில்...
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: இந்த அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் கோ. தியகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, வேதாரண்யம் பியம் அறக்கட்டளை சார்பில் மேல வீதியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகம்: இந்த வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில், அதன் தலைவர் என்.எஸ். கருணாநிதி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அமைப்பின் சாசனத் தலைவர் அ. கேடிலியப்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
ஆயக்காரன்புலம் 3 ஆம் சேத்தி, மேல்பாதி கிராமத்தில் குழந்தைகள் நல மையத்தில் சர்வதேச இந்தியன் சுந்தர்ஜி சமூக நல அறக்கட்டளை சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. வேதாரண்யம் வடக்கு வீதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் சர்தார் அ. வேதரத்னம், தியாகி வைரப்பன் சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
திருமருகல் பகுதியில்...
திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் க. அன்பரசு தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ஆர். இளங்கோவன் (கி.ஊ) மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
தீயணைப்பு நிலையத்தில்: திருமருகல் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் (பொ ) அன்பழகன்  தலைமையில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதேபோல், திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் லெட்சுமி நாராயணன் தலைமையில் விழா நடைபெற்றது. அடுத்து, திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற விழாவில், துப்புரவுப் பணியாளர்கள் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 
திருக்குவளையில்...
திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி முருகன் கோயிலில் சுதந்திர தின விழாவையொட்டி, பொது விருந்து நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், 50 பேருக்கு சாமிக்கு அணிவிக்கப்பட்ட வஸ்திரங்கள் (ஆடைகள்) வழங்கப்பட்டன. இதற்கான, ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஆறுமுகம் செய்திருந்தார். 
இதேபோல், வலிவலம் இருதய கமல நாத சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
குத்தாலம் பகுதியில்...
குத்தாலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஜி. ஜான்சன், நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி சர்க்கரை ஆலை தலைவர் என். தமிழரசன் ஆகியோர் முன்னிலையில் பூம்புகார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் ந. ஞானசெல்வி, மேலாளர் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
இதேபோல், குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாரதிதாசன், வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். இதேபோல், குத்தாலம் ரோட்டரி சங்கத்தில் தலைவர் என். வீரமணி கொடியேற்றினார். குத்தாலம் லயன்ஸ் சங்கத்தில் தலைவர் சின்னதுரை கொடியேற்றினார். திருத்துருத்தி நற்பணி மன்றம் மற்றும் உக்தவேதிஷ் சேவா சங்கம் சார்பில் பட்டாபிராமன் கொடியேற்றினார்.
குத்தாலம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் உ. தனசேகரன் கொடியேற்றினார். குத்தாலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ரவிச்சந்திரனும், பாலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் வேல்தேவியும், பெரம்பூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் நடராஜனும்  கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT