விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெற விரும்பும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள்

சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெற விரும்பும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள கல்லூரி மாணவ, மாணவியர் 2019-2020 ஆண்டுகளில் சென்னையில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெறலாம். மாணவர்களுக்கு சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும் , மாணவிகளுக்கு நேரு உள் விளையாட்டு அரங்கிலும்  விளையாட்டுப் பயிற்கள் அளிக்கப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச் சண்டை, கையுந்துப் பந்து, பளுதூக்குதல், வாள் சண்டை, இறகுப் பந்து, ஜூடோ மற்றும் துப்பாக்கிச் சுடுதல் ஆகிய விளையாட்டுகளிலும், மாணவிகளுக்கு தடகளம், குத்துச்சண்டை, கையுந்துப் பந்து, கால்பந்து, பளுதூக்குதல் மற்றும் ஜூடோ விளையாட்டுகளில் சேர்க்கப்பட உள்ளனர். பயிற்சியில் சேர விரும்புவர்கள் பிளஸ் 2 தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
தனிப் போட்டிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மாநில அளவிலான குடியரசு  தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் நடத்திய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க  வேண்டும். தேசிய அளவிலான போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குழுப் போட்டிக்கான பயிற்சியில்  சேர விண்ணப்பிப்பவர்கள் குடியரசு தின, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பபட்ட கழகங்கள் நடத்திய போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு,  கழகங்கள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம். கையுந்துப் பந்து விளையாட்டில் 185 செ.மீக்கு மேல் உயரமுள்ள மாணவ- மாணவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் அதற்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  இணையதள முகவரியில் தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மே 2 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட வேண்டும். இதற்கான தேர்வு மே  3- ஆம் தேதி சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கம் மற்றும் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com