ஆற்றுப்படுகை பகுதியில் செங்கல் சூளைகளை அகற்றக் கோரிக்கை

கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள செங்கல் சூளைகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள செங்கல் சூளைகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள அளக்குடி, திட்டுப்படுகை, முதலைமேடுதிட்டு, கொன்னக்காட்டுப்படுகை, கீரங்குடி, மாதிரவேளுர், பாலூரான்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டியுள்ள பகுதியில் கரையை பாதிக்கும் வகையில் அதிகளவில் மண் எடுக்கப்பட்டு, செங்கல் சூளைகள் நடத்தப்படுகின்றன. கரையை ஒட்டி பொக்லைன் எந்திரம் மூலம் அதிக மண் எடுப்பதால் ஆற்றின் கரை பலவீனமடைந்துள்ளது. மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கரை எளிதில் உடையும் அபாயம் உள்ளது. மேலும், உரிய அனுமதியின்றி செங்கல் சூளைக்கு மண் எடுக்கப்படுகின்றன. ஆற்றுப்படுகையில் உள்ள பல செங்கல் சூளைகள் அரசிடமிருந்து அனுமதி பெறாமலும் உரிமம் இல்லாமலும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்பட்டு வருவதால் கரையோரம் உள்ள பலர் வீடுகளை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பெரும் பள்ளங்கள் தோண்டி மண் எடுக்கப்படுவதால் மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும் போதும், கரையோரமுள்ள குடியிருப்புகளை தண்ணீர் எளிதில் சூழ்ந்து விடுவதால், குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள், மேடான இடங்களுக்கு இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது. ஆண்டுதோறும் இந்த சம்பவம் நடந்தும் அதிகாரிகள் இது குறித்து உரிய கவனம் செலுத்துவது கிடையாது. எனவே, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் கரையையொட்டி அமைந்துள்ள செங்கல் சூளைகளை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் காமராஜ், மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com