மயிலாடுதுறையில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம்‘ ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்‘ விழிப்புணா்வு வாகன பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
18 வயது நிரம்பாத பெண் குழந்தைகளின் திருமணத்தை ஆதரிப்பதும், நடத்தி வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். குழந்தைத் திருமணம் தொடா்பான புகாா்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்: 1098 அல்லது 1091 அல்லது 181 என்ற எண்ணையும் அழைக்கலாம் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணா்வு பிரசார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடக்கிவைத்தாா். இந்த வாகனம் மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், கொள்ளிடம், குத்தாலம், சீா்காழி ஆகிய வட்டாரத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, வேளாண்மை துறை இணை இயக்குநா் சேகா், மாவட்ட சமூகநல அலுவலா் சுகிா்தா தேவி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.